புத்தகங்கள் தொடர்

புத்தகங்கள் - 1


கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், இசை, நடனம், பாடல், ஓவியம், சிற்பம் மற்றும் இன்னபிற கலை மற்றும் இலக்கிய வடிவங்கள் அனைத்தும் மனிதர்களால் மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளன.


சராசரியான திரும்பத் திரும்ப  செய்யும் அல்லது செய்ய வைக்கப்படும் தினசரி செயல்களைத் தாண்டி வாழ்வைப் பற்றிய புரிதல்களையும், அனுபவங்களையும் இம்மாதிரியான கலை- இலக்கியங்கள் அனைவருக்கும் வழங்குகின்றன.


அனைவரும் கலை-இலக்கியங்களை கவனிப்பதோ, உணர்வதோ, இரசிப்பதோயில்லை. அதனை விட முக்கியமான வேலைகளாக, தினசரி வேலைகளைக் கருதுவதே இலக்கிய ஈடுபாடு இல்லாததற்கான முதல் காரணமாகும்.


சமூக, அரசியல், பொருளாதார சூழல்களும் பெரும்பான்மையினோரை விலக்கி வைத்திருப்பதற்கு மறைமுகக் காரணிகளாயிருக்கின்றன. அடிப்படைக் கல்வி முதல் இலக்கிய ஈடுபாட்டிற்கு தடை போடுவதாகவே அமைந்திருக்கிறது.


இலக்கியத்தில் வெகுஜன வகை, தீவிர வகை என இரு வகைகள் உள்ளன. வெகு ஜன வகை எழுத்தில் வார இதழ்கள், தினசரிகள், மாத நாவல்கள் மற்றும் வார இதழ்கள் சார்ந்த மாத இதழ்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.


வெகுஜன எழுத்தில் காதல், நகைச்சுவை, குற்றம் சார்ந்த சுவாரஸ்யமான கதைகள், நாவல்கள், நாடகங்கள் போன்றவை இடம் பெறுகின்றன. இவ்வகையிலான வெகுஜன எழுத்து, தீவிர இலக்கியங்களை வாசிக்கவும், எழுதவும் சிறந்த பயிற்சியாகும்.


துவக்கத்தில், வெகுஜன எழுத்துக்களை வாசிப்பது நல்லது. ஆனால் அவ்வகை எழுத்துடன் தங்கிவிடுவது, வாழ்வின் தீவிரங்களையும், மறை உண்மைகளையும் அறிந்துணர்வதற்கான மன விரிவுகளை அடைவதற்கான வாய்ப்புக்களையும் குறைத்துவிடக் கூடியது.

- தொடரும்..

Ravi Selvaraj

Ravi Selvaraj

Author